சகலகலாவல்லிமாலை
1.
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
2.
நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
4.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5.
பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
6.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
7.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!
8.
சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
9.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!
10.
மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
பொருள்:
1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?
2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!
3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?
4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!
5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?
6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!
7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!
9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?
10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!